Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  01-02-2021

இன்றைய தியானம்(Tamil)  01-02-2021

பகிர்ந்தளிப்போம் 

“சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.” - அப். 8:4

தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட விக்கில்ஸ்வொர்த் என்ற தேவ ஊழியரின் கூட்டங்கள் சிட்னியில் நடைபெற்றது. ஒரு நாள் உணவருந்தும்படி மேல்தட்டு மக்களும் பணக்காரர்களும் மட்டுமே செல்லக் கூடிய உயர்தர விடுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நுழைந்ததும் கொஞ்ச நேரம் விக்கில்ஸ்வொர்த் கழுகுப் பார்வையுடன் சுற்றிலும் நோட்டம் விட்டார். உடனே அங்கிருந்த ஒரு வெள்ளி முள் கரண்டியை எடுத்து, கண்ணாடி டம்ளரில் தட்ட டிங் டிங் என்ற மணியோசையை கேட்டதும் இடமே ஸ்தம்பித்தது. உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் அப்படியே நிறுத்திவிட்டு அசைவற்று இருந்தார்கள். அவர் தம் கையை உயர்த்தி “சீமான்களே, சீமாட்டிகளே நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் யாருமே சாப்பிட ஆரம்பிக்கும் முன் ஜெபிக்கவேயில்லையே! உங்களைப் பார்த்தால் பன்றி கூட்டத்தைப் போல் இருக்கிறது. இந்த உணவை அளித்தவருக்கு நன்றி கூட சொல்லாமல் பாய்ந்து விழுங்குகிறீர்களே தலை குனிந்து கொள்ளுங்கள், நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்” என்று சொல்லி ஜெபித்தார். அவர் உணவருந்திவிட்டுப் போவதற்கு முன்பாகவே சாப்பிட வந்தவர்களில் இரண்டு உயர்குடி மக்கள் தங்கள் குடும்பத்துடன் அவரை அணுகி இரட்சிப்பை பெற்றுச் சென்றார்கள். இவ்வாறு அவர் இரட்சிப்பை பிரகடனப்படுத்த இடம், பொருள், ஏவல் என எதையுமே பார்க்கவில்லை. 

அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சுவிசேஷம் எல்லா தரப்பட்ட மக்களுக்கும் சென்றடைந்ததை வாசிக்கிறோம். பாரபட்சம், பயம் இவைகளையெல்லாம் கடந்து எல்லாருக்கும் சுவிசேஷத்தை அறிவித்தார்கள். 

பேதுரு – இவர் கல்லாதவராய் இருந்தும் இவர் பிரசங்கம் பண்ணும்போது 3000, 5000 என அதிக எண்ணிக்கையுள்ளவர்களுக்கு சுவிசேஷம் சொன்னார்.  வேதத்தில் தேறினவர்களாக காணப்பட்ட வேதபாரகர், பிரதான ஆசாரியன் இவர்களுக்கு மத்தியிலும் பயப்படாமல் பேசினார். பெரிய கூட்டங்களுக்கு மட்டுமல்ல இத்தாலியா பட்டணத்தில் கொர்நேலியுவின் வீட்டிற்கும், சிறிய ஜெபக்குழுவிற்கும் தேவன் பயன்படுத்தினார். 

பிலிப்பு – இவர் சபையில் சாதாரண பந்தி விசாரிப்புக்காரனாக இருந்தாலும் இவன் சொன்ன சுவிசேஷத்தினால் ஒரு பட்டணமே மகிழும்படி தேவன் செய்தார். எத்தியோப்பியா மந்திரிக்கு வனாந்தரத்தில் போய் சொல்லும்படி இவரை பயன்படுத்தினார்.

 பவுல் - படிப்பில் தேறின இவரைக் கொண்டுதான் லீதியாளின் உள்ளத்தைத் திறந்து அவள் குடும்பம் இரட்சிப்படைந்தது. சிறைச்சாலை சென்ற போது காவலாளரின் குடும்பம் இயேசுவை ருசி பார்த்தது. இப்படியே அத்தேனே பட்டணத்திலும், அரண்மனையிலும் அதிகாரிகளுக்கு முன்பாகவும், தீவுகளிலும் என பல்வேறு இடங்களிலும் பலதரப்பட்ட மக்கள் மத்தியிலும் பிரசங்கித்தான். 

பிரியமானவர்களே! சுவிசேஷம் மனிதனாய் பிறந்த எல்லாருக்கும் பிரித்து கொடுக்கப்பட வேண்டிய சொத்து. அது ஏழைகள், பணக்காரர்கள், அடிமைகள் சுயாதீனர், எஜமான்கள், வேலைக்காரர் என எல்லா தரத்தினருக்கும் உரியது. எல்லா வயதினருக்கும், எல்லா இனத்தவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நிறத்தவர்களுக்கும் உரியது. ஆனால் இதைப் பெற்ற நாம் மற்றவர்களுக்குக் கொடுக்காமல் இருக்கிறோமே! சிந்திப்போம். இதைப் பெற்ற ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கும் உரிமை உண்டு. இதை பயன்படுத்துவோம்! பகிர்ந்தளிப்போம். 
-    Bro. மனோஜ்குமார்

ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவக்கரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)